Monday, 16 April 2012

இந்திய 'அம்பலங்கள்'.............!


இந்திய 'அம்பலங்கள்'!

பல்வேறு நாடுகளில் உள்ள தூதரகங்களில் இருந்து அமெரிக்கத் தூதரக அதிகாரிகளால் வாஷிங்டனுக்குப் பகிரப்பட்ட தகவல்கள் அடங்கிய லட்சக்கணக்கான ஆவணங்களை (கேபிள்களை) அம்பலப்படுத்தியது விக்கிலீக்ஸ்.
அவற்றில், இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்ட 60 லட்சம் சொற்கள் கொண்ட 5,100 கேபிள்களை விக்கிலீக்ஸ்சிடம் இருந்து பெற்று, 'தி ஹிந்து' நாளிதழ் கடந்த 15 ஆம் தேதியில் இருந்து தவணை முறையில் வெளியிட்டு வருகிறது 
இந்திய அரசியல் சூழல் மட்டுமின்றி, வெளியுறவு விவகாரங்கள் தொடர்பாக அமெரிக்க தூதரக அதிகாரிகளால் திரட்டப்பட்ட தகவல்கள், ரகசியங்கள் முதலானவை இவற்றில் இடம்பெற்றுள்ளன.



என்.ஐ.ஏ.. ப.சிதம்பரத்தின் சர்ச்சைக் கருத்து!

பயங்கரவாத குற்றங்களை விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட தேசிய புலனாய்வு ஏஜென்சி (என்.ஐ.ஏ.) குறித்து உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டிருப்பது வாஷிங்கடனுக்கு அனுப்பிய அமெரிக்க தூதரக கேபிளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது, 'தி' ஹிந்து' வாயிலாக வெளியாகியுள்ள விக்கிலீக்ஸ் அம்பல ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
கடந்த 2008-ல் மும்பை தாக்குதலுக்குப் பிறகு கடத்தல், குண்டுவெடிப்பு, அணுசக்தி நிலைகள் மீதான தாக்குதல், இந்திய இறையாண்மைக்கு எதிரான தாக்குதல் முதலிய பயங்கரவாதம் தொடர்பானவற்றை விசாரிப்பதற்காக, 2009-ல் அவசர அவசரமாக ஃபெடரல் ஏஜென்சியாக உருவாக்கப்பட்ட அமைப்புதான் என்.ஐ.ஏ. உருவாக்கப்பட்டது.
இதுதொடர்பான சட்ட திருத்தமும் அறிமுகப்படுத்தப்பட்ட ஒருசில நாட்களிலேயே நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
என்.ஐ.ஏ. உருவாக்கப்பட்டது தொடர்பாக மார்ச் 4,2009-ல் அமெரிக்க தூதரகத்தில் இருந்து வாஷிங்டனுக்கு அனுப்பப்பட்ட கேபிளில், எஃப்.பி.ஐ இயக்குனர் ராபர்ட் முல்லரை மார்ச் 3-ம் தேதி உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் சந்தித்துப் பேசியது குறித்து விவரிக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாதத்தை எதிர்கொள்ள புதிய ஆயுதம் என என்.ஐ.ஏ. குறித்து முல்லரிடம் வருணித்த ப.சிதம்பரம், இதன் பாதக நிலைப் பற்றியும் கூறியுள்ளார்.
என்.ஐ.ஏ.வின் அதிகாரம், அரசியலமைப்புப் பிரிவுகளின் எல்லையைக் கடந்து இருப்பதாகவும், 'ஃபெடரல்' குற்றம் என்பது இந்தியாவில் நடைமுறையில் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
சட்டம் - ஒழுங்கு நடவடிக்கைகளுக்கு மாநில அரசுகளே பொறுப்பு என்ற நிலையில், என்.ஐ.ஏ.வின் அதிகாரம் என்பது நடைமுறையில் சிக்கலைத் தோற்றுவிக்கக் கூடியது என்கிற ரீதியில் அவர் பாதகச் சூழலை ஒப்புக்கொண்டிருக்கிறார் என அந்த கேபிளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதாவது, என்.ஐ.ஏ.வால் விசாரிக்கப்படும் பயங்கவாதம் தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்துக்கு வரும்போது, மத்திய - மாநில அரசு உறவின் அரசியலைமைப்பு அம்சங்களை மீறுவதாக அமையும் சாத்தியம் உண்டென முல்லரிடம் ப.சிதம்பரம் விவரித்திருக்கிறார்.
என்.ஐ.ஏ. உருவாக்கப்பட்ட இரண்டு மாத காலத்திலேயே இப்படி ஒரு கருத்தை அமெரிக்க புலனாய்வு அமைப்பின் இயக்குனரிடம் ப.சிதம்பரம் பகிர்ந்துகொண்டதை அந்த கேபிள் கோடிட்டு காட்டுகிறது.



அணு ஒப்பந்தமும் அத்வானியின் ரெட்டை வேடமும்!

ஆட்சியில் இருக்கும் போது ஒரு நிலைப்பாட்டுடனும், எதிர்கட்சியாக இருக்கும்போது வேறொரு நிலைப்பாட்டுடனும் பாரதிய ஜனதா கட்சி இருந்து வருவதாக, அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் அத்வானியை மேற்கோள்காட்டி, அமெரிக்க தூதரக கேபிளில் பகிரப்பட்டிருப்பது, 'தி' ஹிந்து' வாயிலாக வெளியாகியுள்ள விக்கிலீக்ஸ் அம்பல ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
கடந்த 2009-ம் ஆண்டு மே 13-ம் தேதி (மக்களவைத் தேர்தல் முடிவுக்கு முந்தைய தினம்) பிஜேபி பிரதமர் வேட்பாளர் அத்வானியைச் சந்தித்திருக்கிறார், அமெரிக்க தூதரக உயர் பொறுப்பில் இருந்த பீட்டர் பர்லீக்.
அப்போது, 'பிஜேபி ஆட்சியில் அமர்ந்தால், அமெரிக்கா - இந்தியா இடையிலான அணுசக்தி ஒப்பந்தத்துக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையிலான எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாது,' என்று தன்னிடம் அத்வானி கூறியதாக, அதே நாளில் பீட்டர் பர்லீக் வாஷிங்டனுக்கு அனுப்பிய கேபிளில் குறிப்பிட்டுள்ளார்.
"எவ்வித பதற்றமுமின்றி நம்பிக்கையுடன் காணப்பட்ட பிஜேபி தலைவர் எல்.கே.அத்வானி, பிஜேபி தலைமையிலான அரசு அமைந்தாலும் அமெரிக்கா - இந்தியா இடையிலான வலுவான உறவு தொடரும் என்று கூறினார்,' என அந்தக் கேபிளில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளொன்று புறமொன்று...
அமெரிக்காவுடனான உறவு தொடர்பான பிஜேபி நிலைப்பாட்டின் தன்மையை 2005-ம் ஆண்டு டிசம்பரில் வாஷிங்டனுக்கு அனுப்பப்பட்ட கேபிளில் விவரிக்கப்பட்டுள்ளது.
'மும்பையில் 2005 டிச.26 மற்றும் 27-ல் நடந்த பிஜேபி தேசிய செயற்க்ழு கூட்டத்தில், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசானது, அமெரிக்காவின் அடிமையாக இயங்குகிறது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆனால், மறுநாள் டிச.28-ல் தன்னிடம் தனிப்பட்ட முறையில் பேசிய பிஜேபி தேசிய செயற்குழு தலைவர் சேஷாத்திரி சாரி, வெளியுறவுக் கொள்கை தொடர்பான தீர்மானத்தை எல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்,' என அமெரிக்க தூதரக அதிகாரி ராபர்ட் பிளேக் அனுப்பிய கேபிளில் கூறப்பட்டுள்ளது.







எம்.பி.க்களின் வாக்குகளுக்கு லஞ்சமா? - விக்கிலீக்ஸ் அம்பலத்துக்கு மன்மோகன் மறுப்பு
http://www.vikatan.com/news/images/pm(11).jpg
கடந்த 2008-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசைக் காப்பாற்றுவதற்காக, எம்.பி.க்களின் வாக்குகளுக்கு லஞ்சம் அளிக்கப்பட்டது என்ற விக்கிலீக்ஸ்சின் அம்பலத்துக்கு பிரதமர் மன்மோகன் சிங் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து டெல்லியில் இன்று நடைபெற்ற 'இந்தியா டுடே' மாநாட்டில அவர் பேசுகையில், "இதுபோன்ற ஒரு 'கொள்முதல்' பற்றி எனக்கு எதுவும் தெரியாது. எந்த வாக்குகளையும் வாங்குவதற்கு எவருக்கும் நான் அதிகாரம் அளிக்கவில்லை. பணத்துக்கு வாக்குகள் வாங்கப்பட்டதாக கூறப்படும் விஷயம் பற்றி எனக்கு எதுவும் தெரியாது," என்றார் பிரதமர்.
இதனிடையே, இந்த விவகாரத்தை முன்வைத்து பிஜேபி, இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்கட்சிகள் இன்றும் மக்களவையில் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால், அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கண்டிப்பு...
முன்னதாக, பிரதமர் மன்மோகன் சிங் ராஜினாமா செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வற்புறுத்தலைக் கண்டித்துள்ள காங்கிரஸ் கட்சி, பிரதமர் மன்மோகன் சிங் களங்கம் அற்றவர் என்றும் தெரிவித்தது. அத்துடன், தேசத்தை பலவீனப்படுத்தும் வகையில் எதிர்க்கட்சிகள் பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்வதாகவும் அக்கட்சி சாடியது.
எம்.பி.க்களின் வாக்குக்கு லஞ்சம்: விக்கிலீக்ஸ்...
அமெரிக்கா உடனான அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக, மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு நாடாளுமன்றத்தில் கடந்த 2008-ம் ஆண்டு நம்பிக்கை வாக்குக்கெடுப்பு நடத்தியது.
அப்போது, அரசுக்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் வாக்களிப்பதற்கு, பிற கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்களுக்கு லஞ்சம் தரப்பட்டது என்ற தகவல் விக்கிலீக்ஸ் அம்பலம் மூலம் தெரியவந்துள்ளது.
இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் இருந்து வாஷிங்டனுக்கு பகிரப்பட்ட அந்தத் தகவலில்,
'
காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரும், காங்கிரஸ் தலைமைக்கு நெருக்கமானவராகக் கருதப்படும் முன்னாள் அமைச்சர் சதீஷ் சர்மாவின் உதவியாளர் நசிகெடா கபூர் என்பவர் பிற கட்சி எம்.பி.க்களுக்குக் கொடுப்பதற்காக வைக்கப்பட்டிருந்த சுமார் 60 கோடி ரூபாய் ரொக்கத்தை அமெரிக்கத் தூதரக அதிகாரி ஒருவரிடம் காட்டியிருக்கிறார்.அத்துடன் அஜீத் சிங்கின் ராஷ்ட்ரீய லோக் தள எம்.பி.க்கள் சிலருக்கு ஏற்கெனவே தலா 10 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டுவிட்டதாக அவர் கூறியிருக்கிறார்,' என அந்தத் தகவலில் தெரிவிக்கப்பட்டது.
வலது, இடது தாக்குதல்...
விக்கிலீக்ஸ்சின் அம்பலத்தை வெளியிட்டு வரும் தி ஹிந்து நாளிதழை மேற்கோள் காட்டி, இவ்விவகாரத்தை பிஜேபியும் இடதுசாரிகளும் கையிலெடுத்து, நாடாளுமன்றத்தில் கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றன.
இந்த விவகாரத்துக்கு தார்மிக பொறுப்பேற்று மன்மோகன் சிங் பதவி விலகுவதோடு, இதுதொடர்பாக உரிய விளக்கத்தையும் அளிக்க வேண்டும் என்பது அவர்களின் வலியுறுத்தல்.மன்மோகன் சிங் ஒரு 'வீக்'கான பிரதமர் என்று பிஜேபி முத்தத் தலைவர் அத்வானி கொந்தளிக்க, மறுபுறம் காங்கிரஸ் என்ற சொல்லில் 'சி' என்ற எழுத்தின் பொருள் 'கரப்ஷன்' எனக் கடுமையாகச் சாடியிருக்கிறது, இடதுசாரிகள்!





இந்திய ரேடார்கள் போதாமல் அமெரிக்காவை நாடிய இலங்கை அரசு!
மார்ச் 18,2011

கடந்த 2007-ம் ஆண்டில் விடுதலைப்புலிகளுக்கு எதிராக நடந்த போரின் போது, தமக்கு இந்தியா வழங்கிய ரேடார்கள் போதவில்லை என்பதற்காக, அமெரிக்காவை இலங்கை அரசு நாடியது, கொழும்புவில் உள்ள அமெரிக்க தூதரகத்தால் வாஷிங்டனுக்கு பகிரப்பட்டுள்ளது, 'தி' ஹிந்து' வாயிலாக வெளியாகியுள்ள விக்கிலீக்ஸ் அம்பல ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளது.


2007
ஆம் ஆண்டு ஏப்.1-ல் கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்தில் இருந்து வாஷிங்டனுக்கு 'ரகசியம்' பிரிவில் பகிரப்பட்ட அந்தக் கேபிளில், 'இந்தியாவிடம் இருந்து பெறப்பட்ட ரேடார்களால் விடுதலைப் புலிகளின் வான்வழித் தாக்குதலைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. ஆகவே, எங்களுக்கு மேலும் அதிநவீன ரேடார்களைக் கொடுத்து உதவுங்கள் என அமெரிக்காவிடம் இலங்கைப் பாதுகாப்புச் செயலர் கோத்தபய ராஜபக்ஷே கோரினார்.

அதேநேரத்தில், இந்தியாவுக்குத் தெரியாமல் இதுபோன்ற நடவடிக்கையில் இறங்கக்கூடாது என இலங்கை ஒப்புக் கொண்டது என அந்தக் கேபிளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், '2007 மார்ச் மாதத்தில் கட்டுநாயக்கா விமான நிலையத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இந்தியாவிடம் இருந்து பெறப்பட்ட எம். ரக ஹெலிகாப்டர்களும்  சேதமடைந்தன. தங்களுக்கு இந்தியா அளித்திருந்த இரு பரிமாண ரேடார்களால் விடுதலைப்புலிகளின் விமானம் வந்ததைக் கண்டறிய முடியவில்லை.

எனவே, சீனாவிடமிருந்து முப்பரிமாண ரேடார் பெறுவது என முடிவு செய்யப்பட்டதாகவும்  அமெரிக்க தூதரக அதிகாரிகளிடம் கோத்தபய ராஜபக்ஷே கூறியிருக்கிறார் என்பது 'தி ஹிந்து'வில் வெளியான விக்கிலீக்ஸ் அம்பல ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒருமுறை கடற்பரப்பை கண்காணிப்பதற்காக அமெரிக்கா அளித்த ரேடார்களை இலங்கையின் வடபகுதியில் நிறுவக் கூடாது. அவற்றை தெற்குப் பகுதிக்கு கொண்டு செல்லவேண்டும் என்று இலங்கையை இந்தியா வற்புறுத்தியிருக்கிறது.

அதற்கு இலங்கை உடன்படாததால், இந்தியா தனது எதிர்ப்பை விலக்கிக் கொண்டது என்றும் கொழும்புவில் இருந்து அமெரிக்காவுக்கு பகிரப்பட்ட தூதரக ஆவணம் ஒன்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
           



தூதரின் கேபிள்.
அஃப்சல் குரு விவகாரம் தொடர்பாக, கடந்த 2006 ஆம் ஆண்டு அக்டோபர் 2006-ல் அமெரிக்க தூதரக துணைத் தலைவர் ஜெஃப்ரி பியாட் வாஷிங்கடனுக்கு பகிர்ந்து கொண்ட தகவலில், 'அஃப்சல் குரு விஷயத்தில் குடியரசுத் தலைவர் (கலாம்) - சோனியா காந்தி இடையே கருத்து வேறுபாடு இருந்திருக்கலாம்,' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
"குறிப்பாக தனது கட்சியின் உறுப்பினரான முதல்வர் (காஷ்மீர்) ஆசாத் (குலாம் நபி ஆசாத்), அஃப்சல் குருவுக்காக வாதிட்டுள்ளார்' என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், "ஒருவேளை தான் மீண்டும் குடியரசுத் தலைவராக வாய்ப்பை சோனியா அளிக்கவில்லையென்றால், அப்துல் கலாம் இந்த விஷயத்தை மீண்டும் முன்னிலைப்படுத்தக் கூடும்," என்றும் அதில் அமெரிக்க தூதர் கூறியுள்ளார்.
அத்துடன், இஸ்லாமியர்களின் வாக்குகளை கருத்தில் கொண்டு அஃப்சல் குருவின் தூக்கு தண்டனை நிறைவேற்ற முடியாமலும், அப்படி நிறைவேற்றாவிட்டால் தேசப் பாதுகாப்புக்கு முக்கியத்துவமில்லை என்ற பிஜேபியின் சாடலைச் சந்திக்க வேண்டி இருப்பதாலும் தர்மசங்கடமான நிலையில் காங்கிரஸ் இருந்ததாக அந்த கேபிள் சுட்டிக்காட்டியுள்ளது.
எனவே தான் அஃப்சல் குரு தூக்கு விஷயத்தில் ஆண்டுகளை ஒத்திவைப்பதில் காங்கிரஸ் தொடர்ந்து முனைப்புடன் இருந்ததாக அமெரிக்க தூதரால் பகிரப்பட்ட ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது


புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு நோர்வே எழுதிய கடுந்தொனியிலான கடிதம்! -விக்கிலீக்ஸ் வெளியிட்டது
[ திங்கட்கிழமை, 27 டிசெம்பர் 2010, 04:09.01 AM GMT ]
http://www.tamilwin.com/photos/thumbs/2010/12/anton_peterson.jpg
போர் நிறுத்தம் நடைமுறையில் இருந்த காலப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு நோர்வே எழுதிய அந்தரங்கமான கடிதத்தினை சிறிலங்காவினது முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்கவிற்குக் காட்டுவதற்கு நோர்வே விரும்பவில்லையாம்.
இவ்வாறு விக்கிலீக்ஸஸ் வெளியிட்ட ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருப்பதாக கொழும்பில் இருந்து வெளியாகும் 'சண்டே ரைம்ஸ்' இதழ் தெரிவித்துள்ளது.
சிறிலங்கா அரசாங்கத்திற்கு இதுபோன்ற அந்தரங்கக் கடிதங்களின் பிரதியினை வழங்குவது வார இதழ்களுக்கு வழங்குவதற்கு ஒப்பானது என சிறிலங்காவிற்கான முன்னாள் தூதுவர் ஹான்ஸ் பிறஸ்கர் சிறிலங்காவிற்கான அமெரிக்கத் துணைத் தூதர் ஜேம்ஸ் என்ட்விசிலிடம் கூறியிருந்ததாகச் சொல்லப்படுகிறது.
தற்போது விக்கிலீக்ஸ் வெளியிட்டிருக்கும் இரகசியத் தகவலின்படி அமெரிக்கத் துணைத் தூதுவர் இந்தத் தகவலை அமெரிக்க அரசாங்கத்திற்கு அறிவித்திருக்கிறார்.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்திற்கும் இடையிலான போர் நிறுத்தம் நடைமுறையில் இருந்த காலப்பகுதியில் ஓகஸ்ட் 18 2005 அன்று இந்த இரகசிய தகவல் கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்திலிருந்து அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்திற்கு அனுப்பப்பட்டிருக்கிறது. அந்த இரகசியத் தகவலில் இவ்வாறு என்ட்விசில் கூறியிருக்கிறார்.
ஓகஸ்ட் 17 2005 அன்று நோர்வேயினது வெளிவிவகார அமைச்சர் ஜான் பீற்றசனும் துணை வெளிவிவகார அமைச்சர் ஹெல்கேசனும் விடுதலைப் புலிகள் அமைப்பின் தத்துவாசிரியர் அன்ரன் பாலசிங்கத்தினை லண்டனில் சந்தித்து உரையாடியபோது பிரபாகரனுக்கு என முகவரியிடப்பட்ட கடிதமொன்றைக் கொடுத்திருக்கிறார்கள் [கடிதத்தின் முழு விபரம் கீழே தரப்பட்டிருக்கிறது].
சிறிலங்கா அரசாங்கத்திற்கு வேண்டுகைக்கமைய கொழும்பிலுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தினது தூதுவர் விடுதலைப் புலிகள் அமைப்பினை பயங்கரவாத அமைப்பாகப் பட்டியலிடுமாறு பிறசல்சுக்குப் பரிந்துரைக்கும்.
ஓகஸ்ட் 16ம் நாளன்று கொழும்பில் இடம்பெற்ற இணைத்தலைமை நாடுகளில் தலைவர்களின் சந்திப்பு தொடர்பாக எடுத்துக் கூறுவதற்காக ஓகஸ்ட் 18ம் நாளன்று நோர்வே தூதுவர் ஹான்ஸ் பிறட்ஸ்கர் அமெரிக்கத் துணைத் தூதுவரைச் சந்தித்திருக்கிறார்.
லண்டனில் வைத்து விடுதலைப் புலிகளின் தத்துவாசிரியர் பாலசிங்கத்தினைச் சந்தித்து நோர்வேயின் வெளிவிவகார அமைச்சர் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனுக்கான கடிதத்தினை வழங்கியிருந்ததை இந்தச் சந்திப்பின்போது ஹான்ஸ் பிறட்ஸ்கர் உறுதிப்படுத்தியிருந்தார்.
பிரபாகரனுக்கு எழுதிய கடிதத்தின் பிரதியினைத் தாம் சிறிலங்கா அரசாங்கத்திற்கு வழங்கப் போவதில்லை என்றும் இவ்வாறு வழங்குவது வழமையான நடவடிக்கை இல்லை என்றும் பிறட்ஸ்கர் கூறியிருக்கிறார்.
முன்னதாக நோர்வேயின் வெளிவிவகார அமைச்சர் ஜான் பீற்றசன், ஹெல்கீசன் ஆகியோர் அதிபர் சந்திரிகாவினைச் சந்தித்துக் கலந்துரையாடிய அந்தரங்க விடயங்கள் கொழும்பு ஊடகங்களுக்குக் கசியவிடப்பட்டிருந்தது.
ஆதலினால் குறிப்பிட்ட இந்தக் கடிதத்தின் பிரதியினைச் சிறிலங்கா அரசாங்கத்திற்கு வழங்குவதானது கொழும்பு ஊடகங்களுக்கு வழங்குவதற்கு ஒப்பானது எனப் பிறட்ஸ்கர் கூறுகிறார். இந்தத் கடிதத்தினை எவருடனும் பகிர்ந்துகொள்ளவேண்டாம் என பிறஸ்கர் அமெரிக்காவினைக் கோரியிருக்கிறார்.
குறித்த இந்தக் கடிதத்தினை மிகவேகமாக தமிழுக்கு மொழிபெயர்த்து அதனைக் கிளிநொச்சிக்கு அனுப்புவதாக பாலசிங்கம் ஜான் பீற்றசனிடமும் ஹெல்கெசனிடமும் உறுதியளித்ததாக பிறட்ஸ்கர் கூறுகிறார்.
வடக்குக் கிழக்குப் பகுதியில் அண்மைய நாட்களாக விடுதலைப் புலிகள் மேற்கொண்டுவரும் செயற்பாடுகள் தொடர்பில் பாலசிங்கம் தனது கரிசனையினை வெளியிட்டிருக்கிறார். ஆனால் கதிர்காமரது படுகொலை தொடர்பில் தெளிவான பதிலெதனையும் வழங்காமல் தவிர்த்திருக்கிறார்.
நோர்வேயினது வெளிவிவகார அமைச்சரைச் சந்திப்பதையிட்டுத் தான் மகிழ்வடைவதாகவும் பிரபாகரனுக்கும் நோர்வேக்குமிடையிலான நேரடிச் சந்திப்புக்கள் விரைவில் இடம்பெறுவதைத் தான் விரும்புவதாக பாலசிங்கம் கூறியிருக்கிறார். [அந்தச் சந்திப்பில் தானும் கலந்துகொள்ளுவதற்கு விரும்புவதாகப் பாலசிங்கம் கூறியிருக்கிறார். பாலசிங்கம் இல்லாத நிலையில் ஒரேயொரு முறை மாத்திரமே நோர்வே கடந்தகாலத்தில் பிரபாகரனைச் சந்தித்திருப்பது குறிப்பிடத்தக்கது].
ஜான் பீற்றசனுடனான இந்தச் சந்திப்பின் போது சிறிலங்காவிற்கான பயணம் தொடர்பாக பாலசிங்கம் எதுவும் குறிப்பிடாத போதும் முன்னதாக தான் பாலசிங்கத்தினை லண்டனில் சந்தித்தபோது ஒக்ரோபரில் சிறிலங்காவிற்கு விஜயம் செய்யும் எண்ணத்தில் தானிருப்பதாக பாலசிங்கம் தன்னிடம் கூறியதாக பிறட்ஸ்கர் கூறுகிறார்.
நோர்வே பிரபாகரனுக்கு எழுதியிருக்கும் கடிதத்திற்கான பதில் விடுதலைப் புலிகளிடமிருந்து கிடைத்தபின்னர் தான் மீண்டும் அமெரிக்கத் தூதுவரைச் சந்தித்து உரையாடுவதாக பிறட்ஸ்கர் கூறுகிறார். தானறிந்தவரை ஜான் பீற்றசனுக்கும் ரைசுக்கும் இடையிலான சந்திப்பு இந்தவாரம் இடம்பெறும் என பிறஸ்கர் தொடர்ந்தார். செப்ரெம்பரில் இடம்பெறவுள்ள இணைத்தலைமை நாடுகளின் கூட்டத்தினை நியூயோர்க்கில் நடாத்தும் எண்ணத்திற்கு தாங்கள் தொடர்ந்தும் விருப்பம் தெரிவிப்பதாக பிறட்ஸ்கர் கூறுகிறார்.
இது இவ்வாறிருக்க சிறிலங்காவிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தின் அதிகாரிகளை அழைத்திருந்த சிறிலங்கா அரசாங்கம் ஐரோப்பிய ஒன்றியமானது விடுதலைப் புலிகளைப் பயங்கரவாத அமைப்பாகப் பட்டியலிடவேண்டும் என மீண்டும் கோரிக்கை விடுத்திருக்கிறது [குறித்ததொரு அமைப்பினைப் பயங்கரவாத அமைப்பாகப் பட்டியலிடவேண்டுமெனில் அதற்கென ஐரோப்பிய ஒன்றியம் தனியான நடைமுறைகளைக் கொண்டிருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது].
விடுதலைப் புலிகளமைப்பினைப் பயங்கரவாத அமைப்பாகத் தடைசெய்யவேண்டும் என்ற வேண்டுகையினை கொழும்பிலுள்ள ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் பிறசல்சுக்கு வலியுறுத்தவுள்ளார்கள்.
நோர்வே பிரபாகரனுக்கு அனுப்பிய கடிதத்தின் முழுமையான பகுதி இங்கு தரப்படுகிறது [தயவுசெய்து இதனைக் கவனமாகப் பாதுகாக்கவும்].
வெளிவிவகார அமைச்சு, 
ஒஸ்லோ 
16 ஓகஸ்ட் 2005

திரு.வேலுப்பிள்ளை பிரபாகரன், 
தலைவர், 
தமிழீழ விடுதலைப் புலிகள்.

அன்புடன் பிரபாகரனுக்கு,
அமைதி முயற்சிகள் மிகவும் இக்கட்டானதொரு நிலையில் இருக்கிறது என்பதை நீங்கள் முழுமையான விளங்கிக்கொண்டிருக்கிறீர்கள் என நான் நம்புகிறேன். கடந்த சில மாதங்களாக இடம்பெற்றுவரும் கொலைகள் மற்றும் பதில் கொலைகள் என்பவற்றை நோர்வேயும் அனைத்துலக சமூகமும் அதியுச்ச கரிசனையுடன் அவதானித்து வருகிறது.
விடுதலைப் புலிகளமைப்பு சிறுவர்களைத் தொடர்ந்தும் படையில் இணைந்து வருகிறது. அமைதி முயற்சிகள் தொடர்பில் விடுதலைப் புலிகளின் நோக்கம்தான் என்ன என்ற அவநம்பிக்கையினை ஏற்படுத்துவதாக இவை அமைகின்றன.
சிறிலங்காவினது வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் படுகொலை செய்யப்பட்டமையானது நிலைமையினை மேலும் மோசமாக்கியிருக்கிறது.
இவ்வாறு தொடராக இடம்பெற்றுவரும் கொலைகள் தொடர்பாக இடம்பெற்றுவரும் சட்ட நடவடிக்கைகள் பற்றிய முடிவுக்கு வரவேண்டிய தேவை நோர்வேக்கு இல்லை.
எவ்வாறிருந்தாலும், இந்தக் கொலைகளுக்கு விடுதலைப்புலிகள்தான் காரணம் என சிறிலங்காவிலும் அனைத்துலகிலும் மக்கள் கருதுகிறார்கள். மக்களின் இந்த எண்ணம்தான் அரசியல் யதார்த்தமாக உள்ளது.
விடுதலைப் புலிகள் அமைப்பானது அமைதி முயற்சிகளில் தொடர்ந்தும் முழு ஈடுபாட்டுடனேயே இருக்கிறது என்பதைக் காட்டும் வகையில் புலிகளமைப்புச் செயற்படவேண்டியது அவசியமானது.
தற்போது தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்குள்ள அரசியல் தெரிவுகள் தொடர்பாக எடுத்துவிளக்குவது எனது கடப்பாடு என நான் கருதுகிறேன். இக்கட்டான இந்தத் தருணத்தில் விடுதலைப் புலிகளமைப்பு ஆக்கபூர்வமான வழியினைத் தேர்ந்தெடுப்பதற்குத் தவறுமானால் அனைத்துலகத்தினது எதிர்விளைவு மோசமானதாக இருக்கும்.
இந்தப் புறநிலையில் கீழ்க்காடும் நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பில் விடுதலைப் புலிகள் விரைந்து செயற்படவேண்டும் என நான் கோருகிறேன்.
01. இரண்டு தரப்பினரும் போர் நிறுத்த ஒப்பந்தத்தினை முழுமையான ஏற்றுக்கொண்டு செயற்படுவதற்கான நடைமுறைச்சாத்தியமான வழிகளைக் கண்டறிவதற்கான போர் நிறுத்த ஒப்பந்தத்தினை நடைமுறைப்படுத்துவது தொடர்பான மீளாய்வுக்கு நோர்வே விடுத்திருக்கும் அழைப்பினை ஏற்றுக்கொள்ளுதல்.
02. பாதுகாப்பினை மேம்படுத்தும் வகையில் கிழக்கு மாகாணத்தில் விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா இராணுவத்தினருக்கும் இடையிலான நேரடித் தொடர்புகளை ஏற்படுத்துதல்.
03. விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களின் போக்குவரத்துக்காக போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு முன்வைத்திருக்கும் பரிந்துரைகளை காலதாமதம் எதுவுமின்றி ஏற்றுக்கொள்ளுதல்.
04. வடக்குக் கிழக்கில் சிறிலங்கா அரசாங்கம் முன்னெடுத்திற்கும் மீள்கட்டுமான முனைப்புக்களை வேகப்படுத்தும் வகையில் நடைமுறைச்சாத்தியமான அரசியல் வழிவகைகள் ஊடாக ஒத்துழைப்பினை வழங்குதல். இதற்கு பி-ரொம்ஸ் எனப்படும் ஆழிப்பேரலை நிவாரணத்திற்கான உடன்பாடு தொடர்பில் விடுதலைப் புலிகள் தொடர்ந்தும் ஈடுபாட்டுடன் செயற்படுவது அவசியமானது.
05. கொலைகளையும் சிறுவர் ஆட்சேர்ப்பினையும் உடனடியாக நிறுத்தும் வகையில் வினைத்திறன்கொண்ட முனைப்புக்களை மேற்கொள்ளுதல்.
தற்போது நிலவுகின்ற மோசமான நிலைமையின் தன்மையினை நீங்கள் முழுமையாக விளங்கிக்கொண்டிருப்பதோடு அமைதி முயற்சிகள் தொடர்பாக விடுதலைப்புலிகள் அமைப்பு தொடர்ந்தும் முழு ஈடுபாட்டுடன் செயற்பட்டு வருகிறது என்பதை அனைத்துலக சமூகத்திற்குக் காட்டும் வகையிலான உடனடி நடவடிக்கைகளை முன்னெடுப்பீர்கள் என நான் வெகுவாக நம்புகிறேன். 

தங்கள் உண்மையுள்ள, 
ஜான் பீற்றசன்

தமிழாக்கம்: புதினப்பலகைக்காக  தி.வண்ணம

No comments:

Post a Comment